வெள்ளி, 29 டிசம்பர், 2017

நல்லறம் - நூல் அறிமுகம்

என் பள்ளி ஆசிரியர் திரு. பாவை செ. சங்கர் தான் எழுதிய "நல்லறம்" என்ற நூலை ஒரு நிகழ்வில் எனக்குப் பரிசளித்தார். நேற்று இரவு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது குறித்த பதிவே இது.

"அறம்" என்ற சொல்லை வேறெந்த மொழியிலும் இதே பொருள் தரும்படி பெயர்க்க முடியாது. தர்மம் என்ற சொல் இதற்கு நிகரானது என்று சொல்வார்கள். என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அறம் எந்த அளவுக்கு இருந்தது என்பது ஒருபுறம். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அறம் என்பது அதிகம் பதிவு செய்யப்பட்ட அல்லது அதிகம் பேசப்பட்ட சொல். சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய இலக்கியம் வரை அறத்தைப் பேசுவதுதான் இலக்கியத்தின் நோக்கம்.

அறம் குறித்து சமணர்கள் தான் அதிகம் வலியுறுத்தினர். இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரித்தனர். இதில் இல்லறம் என்பதிலேயே நல்லறம் அடங்கும் என்று சொல்லும் நூல் தான் இது. நான் முன்பு சொன்னதைப் போல் ஒன்றை மட்டும் அறம் என்று வகைப்படுத்தி விட முடியாது. பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும். அதனால், எல்லாவற்றையும் விளக்க முயலாமல் குறிப்பிட்ட ஆறு அறங்களை மட்டும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

கடைசியில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக அல்ல, பொருள் கருதி கடைசி கட்டுரையைத் தான் முதலில் வாசித்தேன். "நூலக அறிவு" என்னும் அந்தக் கட்டுரை வாசிப்பின் முக்கியத்துவத்தையும் நூல்களால் உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. சீன அறிஞர் யுவான் சுவாங் தொடங்கி நம்மூர் எழுத்தாளர் சுஜாதா வரை வாசிப்பு குறித்து பேசிய, வலியுறுத்திய பெரும்பாலோனோர் பற்றி எழுதுகிறார். சரஸ்வதி மகால் உருவாக திருக்குறள் தான் காரணம் என்பதையும் அண்ணா, நேரு போன்றவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்தும் சிறு சிறு சம்பவங்கள் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். எல்லார் வீட்டிலும் படுக்கையறை, சமையலறை, குளியலறை இருப்பது போல் ஏன் புத்தக அறை இருப்பதில்லை என்று ஆதங்கப்படுகிறார். குறைந்தது புத்தக அலமாரியாவது ஒதுக்குங்கள் என்கிறார்.

காலம், சினம், முயற்சி, நா காக்க, மதம் என்னும் மற்ற ஐந்து கட்டுரைகளிலும் இதே போல் விரிவாகப் பேசுகிறார். எல்லாக் கட்டுரைகளிலும் அதன் முக்கியத்துவம், பெருமை குறித்து பேசும் ஆசிரியர் மதம் என்ற தலைப்பில் மட்டும் மதத்தின் பெருமை பேசாமல் அதன் பெயரால் நடந்தேறும் சிறுமைகள் குறித்துப் பேசுகிறார். மதம் எப்படி மனிதர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் கடவுளைக் காப்பதில் மட்டும் கவனம் கொள்கிறது என்று பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் விளக்குகிறார்.

சில சுவாரசியமான தகவல்களும் இருக்கின்றன. ஜப்பானியர்கள் நேரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நமக்குத் தெரியும். எவ்வளவு? ஜப்பானில் ஒரு நொடி கூட தாமதமாக ரயில் வராது என்றுதானே நினைக்கிறீர்கள்? அது மட்டும் அல்ல. அவர்கள் எல்லாவற்றிலும் நேரத்தை மிச்சபடுத்தவே முயல்வார்கள் என்பதற்கு உதாரணம் தான் அவர்களின் தேசிய கீதம் வெறும் நான்கே அடிகள் கொண்டதாகவும், கவிதைகளை ஹைக்கூ என்று சில சொற்களில் அடக்கி விடுவதாகவும் இருக்கிறது.

வளையாபதி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பிரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள், பாரதி, பாரதிதாசன் என்று பழைய இலக்கியங்களில் இருந்து ஏகப்பட்ட மேற்கோள்களைச் சுட்டுகிறார். முயற்சிக்கு எடுத்துக்காட்டாக எடிசன், ஹெலன் கெல்லர் போன்று பழையவர்களின் கதைகளை மட்டும் பேசாமல், சமீபத்தில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குறித்தும் நினைவு  படுத்துகிறார்.

ஒவ்வோர் கட்டுரைக்கும் ஏற்ற திருக்குறளோடு தொடங்கி இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.

இந்த நூலை எழுதியவர் ஓர் பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொனியிலேயே நூல் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், மற்றவர்களின் மேற்கோள்களும் வாழ்க்கைக் குறிப்புகளையும் மட்டுமே அடுக்கிச் செல்வதால் ஒவ்வொன்று குறித்தும் ஆசிரியரின் நிலைப்பாடு என்ன என்பது தெரிவதில்லை. இதையே இந்நூலின் குறை என்று நான் கருதுகிறேன். ஆனால், மாணவர்களுக்கு பெரிய அளவில் இது ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆசிரியர் தன் சொந்த வாழ்வின் அனுபவங்களையும் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். என்றாலும், எழுத்து நடை மிகச் சரளமாக இருக்கிறது.


அறம் என்றால் நயன்தாரா நடித்த படம் என்று மட்டும் புரிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு இந்நூல் அவசியம்தான்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

புரட்சித் தலைவன்!!

எம்.ஜி.யார். பற்றிய கட்டுரை அல்ல இது. சினிமா நடிகர்கள் பேசும் புரட்சி வசனங்களில் மயங்கி புரட்சித் தலைவரையும், புரட்சிக் கலைஞரையும், புரட்சித் தளபதியையும் உருவாக்கியவர்கள் நாம். இவை வெறும் பட்டங்களாக யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கப்படுவதால் உண்மையான புரட்சி நாயகர்கள் நம் டீ-ஷர்ட்டுகளில் வெறும் வியாபார பண்டமாக படங்களாகிப் போனார்கள். ஆனால், புரட்சி என்பது வேறு.

‘உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா’ என்ற பொது அறிவுத் தகவலைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்பாகவே மிகச் சிறு வயதிலேயே ஃபிடல் காஸ்ட்ரோ என்ற பெயரை நான் தெரிந்து வைத்திருந்தேன். தலைவர்களின் பிம்பம் எப்போதுமே பார்த்த நொடியிலேயே நம்மை ஈர்த்துவிடும். ஃபிடலின் தோற்றமும் அப்படியானது.


‘உழைத்தால் உயரலாம்.
யார் உழைக்க?
யார் உயர?'

என்ற புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது. உழைக்கும் மக்கள் கியூபர்கள். அவர்களின் உழைப்பை சுரண்டி உயர்ந்தவர்கள் ஸ்பானியர்களும் அமெரிக்கர்களும். யார் அதிகம் சுரண்டுகிறார்கள் என்பதுதான் போட்டி. அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். பாதிக்கப்படுவது என்னவோ உழைக்கும் வர்க்கம்தான்.

அந்த உழைக்கும் வர்க்கத்தின் நாயகனான ஃபிடல் ஸ்பானிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது ஆச்சர்யத்தைத் தரலாம். ஸ்பெயின் நாட்டின் இராணுவ வீரரான ஃபிடலின் தந்தை கியூபாவின் அழகில் சொக்கி போர் முடிந்ததும் இங்கேயே வந்து தங்கிவிடுகிறார். கடுமையாக உழைக்கிறார். உழைப்பு என்றால் கரும்புத் தோட்டங்களில் இறங்கி வேலை செய்வது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நிலத்தின் உரிமையாளராகிறார் (பண்ணையாராக). இவரும் ஸ்பானியர்தானே. அதனால் நிலவுடைமை உண்டு. பணக்கார குடும்பத்தில் பிறந்த ஃபிடல் காஸ்ட்ரோ தன் தந்தையின் தோட்டங்களில் சிலர் மட்டும் கடுமையாக உழைப்பதையும் தன் தந்தை சொகுசாக வாழ்வதையும், தான் வேலை செய்யாததையும் அதே சமயம் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் இதே தோட்டத்தில் வேலை செய்வதையும் பார்த்த ஃபிடல் சிந்திக்க ஆரம்பித்தார். அந்தச் சிந்தனைதான் கியூப புரட்சியின் வித்து.

இளமையிலேயே மிகவும் சுட்டித்தனமான ஃபிடல் படிப்பதில் சோடையாகிவிடவில்லை. படிப்பதில் அவருக்குத் தீராத ஆர்வம். பள்ளியிலேயே ஆசிரியரை எதிர்த்து கோபித்துக்கொள்ளும் ஃபிடல், முதல் மதிப்பெண் வாங்குவதை பார்த்து அவர் ஆசிரியர்களே அதிசயித்துப் போயினர். கல்விதான் இந்த மக்களை காப்பாற்றும் என்பதில் தெளிவாக இருந்தார். கியூப வரலாற்றை ஆர்வமாக படித்தார். இவருக்கு முன்பே சிறு சிறு போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களை வாசித்தார். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் மாணவத் தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போதிருந்தே அவருக்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. எப்போதும் துப்பாக்கியுடந்தான் எங்கும் செல்வார். போராட ஆரம்பித்தார். அதாவது மக்களை ஒருங்கிணைப்பது; புரட்சி செய்வது. அதுவும் ஆயுதம் ஏந்திய புரட்சி. சே குவேரா என்ற இன்னொரு சக்தியும் இணைந்து கொண்டது. அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு. 

புரட்சியின் பலனாய் மக்கள் விடுதலை அடைந்தனர். புரட்சிக்குப் பிறகான முப்பது ஆண்டுகள் மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடன் ஆட்சி நடந்தது. அதிபரான ஃபிடல் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என்று மக்கள் நினைத்தனர். அதே சமயம், ஃபிடலால் மட்டும்தான் சிறந்த் நிர்வாகத்தை அளிக்க முடியும் என்றும் நம்பினர்.

ஃபிடலிடமே மொத்த அதிகாரமும் குவிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. காரணம், கியூபாவில் இன்றும் ஆயுதமேந்திய போரட்டத்துக்கு அனுமதியுண்டு. நினைத்துப்பாருங்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட இது சாத்தியமா? மாணவர்களும் விவசாயிகளும் இங்கு ஆயுதம் ஏந்தி போராட உரிமை இருக்கிறதா? ஆனால் கியூபாவில் இருக்கிறது.

விடுதலை பெற்று தருவதைவிட நிர்வாகம் செய்வதுதான் கடினமானது. இந்திய விடுதலைப் போராட்டத்தைவிட விடுதலைக்குப் பிறகு நாட்டை எந்தத் திசையில் கொண்டு செல்வது என்பதுதான் சவால். கியூபாவில் புரட்சி முடிந்து 30 ஆண்டுகளில், எப்போதுமே தலைவர்கள் படங்கள் இருந்ததே கிடையாது. ஃபிடலின் படம் அதிகாரப்பூர்வமாக கிடையாது. புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்த முதல் சில மாதங்களிலேயே அது தடை செய்யப்பட்டுவிட்டது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்களைப் பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும், பிற ஆலைகளுக்கு சூட்டுவதும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே சமயம், அது கொடுங்கோலான ஆட்சி மாதிரிதான் இருந்திருக்கும் மக்களுக்கு.

நான் முன்பு குறிப்பிட்டதைப் போல கல்வியின் மீது தீராத பிரேமை கொண்டவர் ஃபிடல். ஒருநாளைக்கு 14-15 மணி நேரம் வீதம் இரண்டு ஆண்டு காலம் சிறையில் படித்துக்கொண்டே இருந்தாராம். “வாழ்நாள் முழுவதும் எத்தனை முடியுமோ அத்தனை புத்தகங்களைப் படித்து வந்திருந்தபோதும், படிப்பதற்கு நேரம் போதவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. நூலகங்களையும், புத்தகங்களின் பட்டியலையும் பார்க்கும்போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிடமுடியவில்லையே என்று வருந்துவேன்” என்றவர் அவர்.

இன்னமும் எனக்கு அவர் மீது பெரும் வியப்பும் மரியாதையும், இன்னும் 
சொல்லப்போனால் கண்கலங்கி நான் நிற்பதும் கல்விக்கு அவர் செய்த செயல்கள்தான். புரட்சிக்குப் பிறகு கியூப மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று அவர் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். ஆலைகளுக்கும் குழந்தைகள் இல்லாத வீடுகளுக்கும் கொடுக்கப்படும் மின்சாரத்தைக் குறைத்து அதை குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுத்தவர் அவர். ஒருபோதும் பள்ளிகளில் மின்வெட்டு இருந்ததில்லை. கியூப ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களுடன் உலகின் மிகச் சிறந்த புத்தகங்களும் விற்கப்படுமாம். இதுமாதிரி உலகில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11 அமெரிக்க ஜனாதிபதிகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர் ஃபிடல். ஒருபோதும் அடிபணிந்தவர் அல்லர். ‘தக்கினியூண்டு’ கியூபா ‘அம்மாம் பெரிய வல்லரசு’ அமெரிக்காவை ஆட்டி வைப்பது என்பது சாதாரணமான விஷயமா? அமெரிக்காவின் ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார் ஃபிடல். ‘அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது ‘ஒற்றை வர்க்க ஆட்சி’ என காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். அங்கு கடின உழைப்பை மேற்கொள்ளக்கூடிய பணிகளில் ஈடுபடுவோர் வெள்ளையர்கள் அல்லர். கருப்பின மக்கள், துருக்கியர்கள், ஆசியர்கள், புலம் பெயர்ந்தோர் ஆகியோர்தான். இது ஒரு புதுவகை அடிமை முறை. மரணதண்டனை வழங்குவதில் கிரிமினல் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள் என்ற வேறுபாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அத்தண்டனை வெள்ளையருக்கு வழங்கப்படுவது அரிது.’ அமெரிக்காவில் இருப்பதும் ஜனநாயகம்தான். கியூபாவில் இருப்பதும் ஜனநாயகம் தான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல என்கிறார் ஃபிடல். அமெரிக்காவில் இருப்பது முதலாளித்துவ ஜனநாயகம். கியூபாவிலோ சோசலிஷ ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் முதலாளித்துவ அமைப்பினுள் இருக்கவே முடியாது. அது சோசலிச அமைப்பினுள் மட்டுமே நிலவ முடியும் என்றும் தெளிவாக்குகிறார். ஐ.நா சபையிலேயே ஜனநாயகம் இல்லை என்று அவர் சொல்வது உண்மைதானே?

இப்படியெல்லாம் பேசினால் அமெரிக்கா என்ன வாயில் விரல் சூப்பிக்கொண்டிருக்குமா? ஃபிடலைக் கொல்ல 638 முறை (ஆமாம். நீங்கள் சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். 638 முறை) முயற்சி செய்ததாம் அமெரிக்க உளவுத்துறை. எப்படி? ஃபிடலின் சிகரெட்க்குள் விஷம் வைத்து, ஸ்க்யூபா டைவிங்கின்போது அவர் உடுத்தும் உடையில் விஷக்கிருமிகளை வைத்து.....என்ன செய்தாலும் 638 முறையும் அமெரிக்காதான் தோற்றுப்போனது.

ஃபிடல் கல்விக்கு எப்படி முன்னுரிமை கொடுத்தாரோ அதற்கு நிகராக மருத்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்தார். இங்கேதான் இந்திய அணுகுமுறையும் கியூப அணுகுமுறையும் வேறுபடுகிறது. கியூபா மின் அணுவில், உதிரிப்பாகங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஜப்பான், அமெரிக்கா போன்று கணிணி தயாரிப்பில் போட்டி போடுவதில்லை. ஆனால், மருத்துவம், சுகாதாரம் போன்ற குறிப்பான துறைகளில் தேவையான சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

கம்யூனிசமும் சோசலிசமும் தோற்றுப்போன சித்தாந்தம் என்று அரற்றுவோர் பலர் உள்ளனர். ஆனானப்பட்ட சோவியத் ரஷ்யாவிலேயே தோற்றுப்போய்விட்ட அது, இனி உலகின் வேறு நாடுகளில் வளர வாய்ப்பே இல்லை என்போர்க்கு ஃபிடல் தான் விடை. உண்மையான, நேர்மையான சித்தாந்தம் எதுவும் தோற்றுப்போவதில்லை. சித்தாந்தத்தின் குரல்வளையை இறுகப் பிடித்துக்கொண்டு காலத்திற்கேற்ற மாற்றங்கள் செய்யாமல் போகும்போதுதான் அது தோற்றுப் போகிறது. இதை ஃபிடல் மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருந்தார். “மண்ணுக்கேற்ற மார்க்சியம் வேண்டும்” என்று சொல்கிறார் அவர். ஃபிடலையும் கியூபாவையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.

ஃபிடலின் இறப்பு வருத்தமானதுதான். ஆனால், அவரையும் அவர் வழிநடத்திய புரட்சியையும் நினைக்கும்போது வருத்தம் ஏற்படவில்லை. பெருமிதம்தான் உண்டாகிறது.

ஃபிடலின் நேரடி வார்த்தைகளில் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். “நாம் தொடர்ந்து கனவு காண வேண்டும் – நல்லதொரு உலகம் உண்மையில் உருவாகும் என்று; காரணம், தொடர்ந்து போராடினால், அது கைகூடும். மனிதகுலம் தனது கனவுகளை, இலட்சிய உலகைக் கைவிடவே கூடாது. என்னைப் பொருத்தவரை ஒரு புரட்சியாளன் கனவு காண்பதை எப்படி நிறுத்துவதேயில்லையோ அதுபோல, போராட்டத்தை ஒருபோதும் கைவிடுவதில்லை”.

உண்மையான புரட்சித் தலைவன், - ஃபிடல்!!!


புதன், 26 அக்டோபர், 2016

ஒற்றை வரி விமர்சனம்

பிரபு காளிதாஸ் அவர்கள் முன்பு ஒருமுறை தன்னுடைய முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் தொலைக்காட்சியில் கதை சொல்வதாகவும் அதைப் பார்த்ததும் தனக்குச் சிரிப்பு வந்ததாகவும் சொல்லியிருந்தார். விளம்பர வெளிச்சத்துக்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் குறிப்பிடிருந்தார். அந்தப் பதிவிற்கு ஆதரவான கருத்துகள் பெரும்பாலும் இல்லை, ஒன்றிரண்டைத் தவிர. ஒன்றுமே தெரியாமல் பலர் நிகழ்ச்சி நடத்தும்போது இறையன்பு போன்ற விஷயம் தெரிந்தவர்கள் பேசுவதில் தவறில்லை என்றே பலரும் சொல்லியிருந்தனர். பின்னூட்டங்களிலும் சில கருத்துக்களை பிரபு காளிதாஸ் சொல்லியிருந்தார்.

அவருடைய கருத்துக்கள் இவை:
1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமா?
2. அவர் இறங்கி அடிக்க வேண்டிய களங்கள் நிறைய இருக்கின்றனவே? அதை விட்டு ஏன் கதை சொல்கிறார்?
3. சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்வதை விட்டுவிட்டு இவரே உட்கார்ந்து புத்தகம் எழுதுவது சரியா?
4. தானும் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற அற்ப ஆசைக்காக கூட அவர் கதை சொல்ல ஒத்துக்கொண்டிருக்கலாம்.
5. கதை சொல்ல ஒப்புக்கொண்டிருக்கும் இறையன்பு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்வருவாரா?
இக்கருத்துக்களுக்கான என்னுடைய எதிர்வினைகள் கீழே:

1. கதை சொல்வதற்காக ஒருவர் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டியதில்லைதான். ஆனால், ஐ.ஏ.எஸ் படித்த ஒருவர் கதை சொல்வது குற்றமா என்ன? ஒரு ஐ.ஏ.எஸ் கதையும் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நன்றாக கதை சொல்லும் திறனும் கதையும் தெரிந்தால் போதாதா? உலகமே கதை சொல்லாமல் நகர்கிறதா? நம் நாட்டிலும் நாற்று நடுபவர்கள் முதல் நாட்டை ஆள்பவர்கள் வரை எல்லோரும் கதைச் சொல்லிக்கொண்டுத்தானே இருக்கின்றார்கள்? கதைதான் சொல்லப்போகிறோம் என்றால் யாராவது ஐ.ஏ.எஸ் படிப்பார்களா என்ன?

2. அவர் இறங்கி அடித்த களங்கள் நிறைய இருக்கின்றன. அவர் பணி வரலாற்றைப் பார்த்தால் அது தெரியும். அவர் பணிபுரிந்த மாவட்டங்களில் என்னென்ன புதுமைகள் செய்தார், எவ்வளவு நேர்மையாக இருந்தார், என்னென்ன சாதித்தார் என்று புரியும். நிலவொளிப் பள்ளி, கடலூரில் மீனவக் குடும்பளுக்காகச் செய்தவை, சுற்றுலாத் துறையில் இருந்தபோது செய்த சாதனைகள் என இப்பட்டியல் நீளும்.. இப்போதும் அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால், அரசு அவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 'தூக்கி அடிப்பதிலேயே' குறியாக இருக்கிறது.

3. அவர் எத்தனையோ சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் அறிமுகம் செய்து நான் படித்த புத்தகங்கள் அனேகம். மேலும், அவர் புத்தகம் எழுதக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? அதுமட்டுமல்ல. அவர் தொலைக்காட்சியில் பேசுவதாலும் புத்தகம் எழுதுவதாலும் தன்னுடைய பணியில் சிறப்பாகப் பணியாற்றவில்லை என்ற சொல்ல ஆதாரம் எதுவும் இல்லையே? அதோடு, இறையன்புவின் பெரும்பான்மையான புத்தகங்களைப் படித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். அவருடைய சில புத்தகங்களைப் படித்தால் பல புத்தகங்களைப் படித்த அளவுக்கான செய்திகள் இருக்கும். குறிப்பாக, பத்தாயிரம் மைல் பயணம், இலக்கியத்தில் மேலாண்மை, வையத் தலைமை கொள், போர்த் தொழில் பழகு, Ancient Yet Modern, Random Thoughts போன்ற புத்தகங்கள். இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலில் அவர் கிட்டத்தட்ட 300 புத்தகங்களை ஆராய்ந்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் பற்றிய சிறு குறிப்பும் கொடுத்து அறிமுகம் செய்கிறார். எனவே, அவர் புத்தகங்களை அறிமுகம் செய்வதில்லை என்பது தவறு.

4. தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்கிறார் என்பது அவதூறு அல்லாமல் வேறொன்றுமில்லை. அப்படி வந்துதான் அவர் பிரபலமாக வேண்டும் என்றில்லை. மேலும், இறையன்பு வெறும் கதைகளைச் சொல்லிச் செல்பவர் அல்லர். முடிந்தவரை இளைஞர்களை முன்னேற்ற தன்னாலான உத்வேகத்தைக் கொடுத்து வருகிறார். அவரால் தாக்கம் பெற்று முன்னேறிய இளைஞர்கள் பலர். அவரைக் கொண்டு தொலைக்காட்சிகள் பிரபலமடைய முயல்கின்றன என்று சொன்னால் கூட அது பொருந்தும்.

5. இறுதியாக, விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் தயாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவ்வாறு செய்வது அரசுப்பணிக்கு புறம்பானது. காரணம், தற்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் அரசியல் தொடர்பாகவையே பெரும்பாலும் இருக்கின்றன. ஒரு அரசு அதிகாரி அரசைப் பற்றிக் கருத்து சொல்லக்கூடாது. ஏற்கெனவே, காவல்துறை பற்றி சகாயம் ஐ.ஏ.எஸ். கருத்துச் சொல்லி அது பெரும் சர்ச்சையானது. இன்னொன்று, இவற்றை விவாத நிகழ்ச்சிகள் என்று சொல்வது தவறு. இவை விதண்டாவாத நிகழ்ச்சிகள். தொ.காட்சியில் கதை சொல்வதே விளம்பரத்துக்காக என்று முதலில் சொன்ன பிரபு காளிதாஸ் பின்னர் விவாதங்களில் மட்டும் பங்குபெற அழைப்பது எப்படி? அதுவும் விளம்பரம் ஆகிவிடாதா?

இது இறையன்புவுக்கு 'ஜல்லி' அடிக்கும் பதிவல்ல. எனக்கும் அவரிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன, விமர்சனங்களும் உண்டு. ஆனால், பிரபு காளிதாஸ் போல அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் (அவர் ஐ.ஏ.எஸ் என்பதைத் தவிர) ஒற்றை வரியில் விமர்சனம் என்ற பெயரில் எதையாவது சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

Ads Inside Post